கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்லூரி வளாகத்தில் திடீரென்று கன்டெய்னர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்துக்குட்பட்ட10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுழற்சி முறையில் போலீஸார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் அவ்வபோது கல்லூரியில் உள்ள பாதுகாப்புப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் ஜி.சி.டி கல்லூரிக்குள் கன்டெய்னர் போன்ற மொபைல் வேன் மற்றும் சாதாரண வேன் உள்ளே நுழைந்தன. இதைப்பார்த்த தி.மு.க–வினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தி.மு.க வேட்பாளர்கள் நா. கார்த்திக், வ.ம. சண்முகசுந்தரம், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் ஜி.சி.டி கல்லூரிக்கு விரைந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர், “இங்கு பெண் காவலர்கள் பணி புரிவதால் அவர்களுக்கு டாய்லெட் இணைக்கப்பட்ட மொபைல் வேன் வரவழைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். தி.மு.க வேட்பாளர்கள், “எதற்காக இந்த நேரத்தில் கொண்டுவர வேண்டும்?. வாகனத்தில் யாரெல்லாம் இருப்பார்கள்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், இரண்டு வேன்களிலும் அவர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
அதில் எந்த பொருள்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. “கல்லூரியில் கழிப்பிட வசதி இல்லையா? தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் இதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா?. இது நம்பும்படியாக இல்லை. எனவே, இரண்டு வேன்களையும் வெளியே அனுப்புங்கள்” என தி.மு.க கூட்டணியினர் கூறினர். இதைத்தொடர்ந்து வேன்கள் வெளியேற்றப்பட்டன. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.