கோவை தெற்கு தொகுதியில் கமல் ஹாசன் போட்டி..! அதிரடியாக மாறி வருகிறது அரசியல் களம்

சென்னை,

கோவை தெற்கு தொகுதி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அங்கு வேட்பாளராக களம் இறங்குவதாக அறிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இங்கு வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது பற்றி இன்னும் அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது.

இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த பிறகு கடந்த லோக்சபா தேர்தலை அந்த கட்சி சந்தித்தது. அதில் கமல் களம் இறங்கவில்லை. அந்த வகையில் இதுதான் கமல்ஹாசன் சந்திக்கப்போகும் முதல் தேர்தல் ஆகும்.

கோவை தெற்கு தொகுதியில் இரண்டு தேசிய கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் மோத உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .கவனத்தை ஈர்த்துள்ளது அந்த தொகுதி. வானதி சீனிவாசன் எளிதாக வெல்லலாம் என்று நினைத்திருந்த நிலையில், கமல்ஹாசன் மிகப்பெரிய போட்டியாளராக அங்கு உருவெடுத்துள்ளார். ஏனெனில், அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது.

 

Translate »
error: Content is protected !!