சட்டமன்ற தேர்தல் 2021… 30 நாட்களில் இதுவரை 1,799 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல்துறை மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளன

சென்னை,

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த 30 நாட்களில் இதுவரை 1,799 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உரிமையாளர்களிடம் இருந்து காவல்துறை மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இம்மாதம் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 28ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி தொடர்பான போஸ்டர், பேனர், பெயர் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சி பிரமுகர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தேர்தல் பறக்கும்படையினருடன் இணைந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தேர்தலின் போது எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதுமட்டுமில்லாமல் குற்றப்பதிவேடு ரவுடிகளை கண்டறிந்து போலீசார் சிறையிலும் அடைத்து வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சென்னை நகரில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் நேற்று வரை 333 வழக்குகள் பதிவாகியுள்ளன. கணக்கில் வராத பணம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் உரிமம் பெற்ற 1,799 துப்பாக்கிகள் அதன் உரிமையாளர்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,828 ரவுடிகளிடம் 6 மாதங்களுக்கு எந்த குற்றச்சம்பவத்திலும் ஈடுபடாத வகையில் பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அவர்கள் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டால் பாண்டு பத்திரத்தில் அளித்த உறுதியை மீறியதாக அவர் மீது மாஜிஸ்திரேட் அந்தஸ்த்தில் போலீஸ் துணைக்கமிஷனர் நடவடிக்கையில் ஈடுபடுவார். அதனையடுத்து அவர்கள் 1,973 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!