சாலைகள் அமைத்து தராததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மலை கிராம மக்கள் போராட்டம். வாக்கு கேட்டு எந்த அரசியல் கட்சிகளும் தங்கள் மலை கிராமத்திற்கு வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.,
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளகெவி ஊராட்சியின் ஒரு பகுதியான பெரியூர், சினூர் ஆகிய மலை கிராமங்களுக்கு செல்வதற்கு பெரியகுளத்தில் இருந்து சோத்துபாறை அணைப்பகுதி மேல் 13 கிலோ மீட்டர் நடந்து செல்லவேண்டும்.
இந்த மழை கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 4 தலைமுறையாக வசித்து வருகின்றனர். சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின் போது சாலை அமைத்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தாலும் இதுவரை எந்த அரசாங்கமும் சாலை அமைத்து தராத நிலையில் உள்ளதாக மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சாலை வசதி இல்லாததால் அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசியை 1000 ரூபாய் செலவு செய்து தங்களது இல்லங்களுக்கு கொண்டு செல்வதாகவும், எந்த அடிப்படை வசதிகளும் தங்களுக்கு கிடைப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
சாலை வசதியை இதுவரை எந்த அரசாங்கமும் செய்து தராததால் இன்று மலைகிராம மக்கள் ஒன்றாக திரண்டு வந்து பெரியகுளம் அருகே உள்ள கல்லாறு வாச்சீங்டவர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தின் போது சாலை வசதி செய்து தராததால் எந்த அரசியல் கட்சியினரும் வாக்கு கேட்டு வராதீர்கள் எனவும், எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என வாசங்களுடன் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் பெரியூர் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்திற்காக 12 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.