சாலைப்பணியை மறந்தா, ஓட்டையும் மறந்துடுங்க! மலைவாழ் மக்கள் ஆவேசம்

கொடைக்கானல் அருகே, வெள்ளகெவி மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, கும்பக்கரை வன அலுவலம் முன் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை மற்றும் வெள்ளகெவி மலைப்பகுதி வழியாகச் சென்று, ஆங்கிலேயர் காலத்தில் கொடைக்கானல் உருவாக்கப்பட்டது.

கொடைக்கானல் உருவாகும் முன்பே, கும்பக்கரைக்கு மேல் உள்ள வெள்ளகெவி என்னும் மலையில் மக்கள் குடியிருந்து வந்துள்ளனர். கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்து, பெரியகுளம் – கும்பக்கரை முதல், வெள்ளகெவி வரையில் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க, அப்போதை முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டு 97 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, கும்பக்கரை அருவிக்கு மேல் லவாத்துறை என்னும் இடத்தில் பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதாகவும், பின்னர் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்பகுதி மக்கள் சாலை அமைத்துத்தருமாரு கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மலை கிராமங்களில் உள்ள 1000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விளையும் விவசாயப் பொருட்களை தலையில் சுமந்து கொண்டு வர வேண்டியுள்ளது.

அத்துடன், உடல்நிலை பாதிக்கப்படும் நபர்களை டோலி கட்டி தூக்கி வருவதால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், பல உயிரிழப்புகளும் ஏற்பவதாக, மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி, பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை செல்லும் சாலையில், தேவதானபட்டி வனச்சரகர் அதிகாரி அலுவலகம் முன்பாக, வெள்ளகெவி மலை கிராம விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைச்சாலை பணிகளை துவக்காவிட்டால் வரவிருக்கு சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மலைகிராம விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தேவதானபட்டி வனச்சரக அதிகாரி டேவிட்ராஜுவிடம், சாலை அமைத்துத்தரக்கோரி, மனுவினை வழங்கினர்.

Translate »
error: Content is protected !!