திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வீடியோ..!
சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சேப்பாக்கம்– – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக சார்பில், அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் பொருளாளர் கசாலியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளராக உள்ள ஜெ.எம் பஷீர் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஒரு வீட்டில் பெண்களுக்கு அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்துடன் ரூ. 500 வழங்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. சேப்பாக்கம் தொகுதி தானா என உறுதி செய்து கொண்ட பின்னரே அங்கு உள்ள பெண் வாக்காளர்களுக்கு ஜெ.எம் பஷீர் பணம் வழங்கும் காட்சி இடம் பெற்று இருந்தது.
இதையடுத்து சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அந்த வீடியோ பதிவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். பிறகு சேப்பாக்கம்– திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாகநாதன் அது தொடர்பாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் நேற்று மதியம் புகார் அளித்துள்ளார்.