சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதியிடம் அந்த பெண் எஸ்.பி. புகார் அளித்தார்.
இதையடுத்து, சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உரையில் காவல்துறை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். மேலும், விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் எனவும் கேள்வி எழுப்பினார்.
சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது வரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவருடைய மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆய்வு அறிக்கைக்கு காத்து இருப்பதாகவும் விளக்கமளித்தார். மேலும், 8 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் சிபிசிஐடி‘க்கு உத்தரவிட்டார்.