சேலம்,
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ) கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதைத்தான் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களித்தது அதிமுக. ராஜ்யசபாவில் அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் இந்த மசோதா நிறைவேறி இருக்காது.
மேலும் நாடு முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சி.ஏ.ஏ.வால் தமிழகத்தில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என கோபமாக கேள்வி கேட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சி.ஏ.ஏ.வை கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என கூறியிருந்தார். ஏற்கனவே சி.ஏ.ஏ.வை மத்திய அரசு ரத்து செய்யாது என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியிருந்தார்.
இதனிடையே எடப்பாடி தொகுதியில் வேட்பு மனுவை முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது சி.ஏ.ஏ. குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசை வலியுறுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம் என்று மட்டும் பதிலளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.