தீபாவளி பண்டிகை காலத்தில் சீனப் பொருட்களை பொதுமக்கள் புறக்கணித்ததால், அந்த நாட்டு நிறுவனங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) தனது ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, நொய்டா, கொச்சின் உள்பட 20 முக்கிய நகரங்களை விநியோக நகரங்களை அது கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.
வர்த்தகர்களும், பொதுமக்களும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று சி.ஏ.ஐ.டி. ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில், இந்த 20 நகரங்களில் தீபாவளி பண்டிகை கால விற்பனை தொடர்பாக ஆய்வு ஒன்றை அது மேற்கொண்டது.
அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி, சீன பொருட்கள் புறக்கணிப்பு மத்தியில் தீபாவளி பண்டிகை காலத்தில் 20 விநியோக நகரங்களில், நுகர்வோர் சாதனங்கள், தங்க நகைகள், காலணிகள் என அனைத்து விதமான பொருட்களும் சுமார் மொத்தம் ரூ.72 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.
அதேநேரம், சீன பொருட்களை மக்களும், வர்த்தகர்களும் புறக்கணித்ததால் அதன் விற்பனை மந்தமானது. இதனால் சீனாவுக்கு தற்போதைய பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.