சென்னையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து கஞ்சா விற்ற 3 பேர் கும்பல் கைது: 10 நாளில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை

சென்னை, ராயப்பேட்டையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை நகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

அதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் இன்று காலை கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது ராயப்பேட்டை, ரோட்டரி நகர் மற்றும் லாயிட்ஸ் ரோடு சந்திப்பு அருகே 3 பேர் ஆட்டோவில் கஞ்சா பதுக்கி வைத்து, ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பட்டாளத்தைச் சேர்ந்த கணேஷ் (34), ராயப்பேட்டையைச் சேர்ந்த விஜய் தினேஷ் (30), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கீதன் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள், ரூ. 5,600 மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்கள் ராயப்பேட்டை பகுதியில் வாட்ஸப் குரூப் அமைத்து அதன் மூலமாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ராயப்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் மைலாப்பூர் துணை ஆணையர் சஷாங்சாய் தனிப்படை போலீசாரால் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!