சென்னை, பாரிமுனை, ஏழுகிணறு பகுதியில் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் அரிசி மற்றும் 130 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, ஏழுகிணறு பகுதியில் ரேஷன் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், வடசென்னை, இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அதனைத் தொடர்ந்து ஏழுகிணறு, குமரப்பா தெருவில் உள்ள அரிசி மற்றும் பலசரக்கு கடையில் பெருமளவு ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்பேரில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடையின் உரிமையாளர் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் (49), அவரது சகோதரர் ஜவஹர் (52) மற்றும் அவரது கூட்டாளிகள் பன்னீர்செல்வம் (48), ஆட்டோ டிரைவர் நிசார் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், பன்னீர்செல்வம் ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக வாங்கி, நிசார் மூலம் ஆட்டோவில் தனது மளிகைக் கடைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் அவரது கடையில் இருந்த கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ எடை கொண்ட 25 அரிசி மூட்டைகள், 130 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் 4 பேரும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன், உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர்.