பிற மாவட்டங்களிலிருந்து அலுவல் நிமித்தம் சென்னை வரும் காவல்துறையினர் தங்கும் விடுதிகளை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டு அவற்றை மேம்படுத்த உத்தரவிட்டார்.
வெளி மாவட்டங்களிலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் காவலர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னை, மண்ணடியில் ஆண் காவலர்கள் ஓய்வு இல்லம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆண் காவலர் ஓய்வு இல்லத்தில் தங்கும் எஸ்ஐ முதல் ஏடிஎஸ்பி வரை 12 அறைகள் மற்றும் காவலர்களுக்கு 30 படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய அறையும் உள்ளது. அதிகாரிகள் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.100ம் காவலர்கள் தங்குவதற்கு ரூ. 50ம் வசூலிக்கப்படுகிறது. வெளிமாவட்டங்களிருந்து வரும் காவலர்கள் ஆண் காவலர் ஓய்வு இல்லத்தை பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர். மேலும் பெண் காவலர்கள் தங்குவதற்கு பெண் காவலர்கள் ஓய்வு விடுதி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஐசக் தெருவில் உள்ளது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மண்ணடி பகுதியில் உள்ள ஆண் காவலர்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டார். அதனையடுத்து சென்ட்ரல் பகுதியில் உள்ள பெண் காவலர்கள் தங்கும் விடுதியையும், புதுப்பேட்டை பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள் தங்கும் விடுதியையும் நேரில் தணிக்கை செய்தார்.
அவற்றின் பராமரிப்பு, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த கமிஷனர் அங்கு மேலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த பொறுப்பு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது சென்னை நகர காவல் தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், பூக்கடை துணைக்கமிஷனர் மகேஷ்வரன், போக்குவரத்து வடக்கு துணை ஆணையாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்