சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை.. 35 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நடத்திய பல்வேறு சோதனையில் மொத்தம் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள 427 கர்நாடக மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கேரளா பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

சென்ட்ரல் ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவனேசன், எஸ்ஐ ரவி, காவலர் யோகேஷ்குமார் மீனா தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 3.50 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை வந்த ரயிலில் இருந்து இறங்கிய பெண்ணின் உடைமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.

அவர் வைத்திருந்த டிராவல் பைக்குள் சோதனை செய்த போது உள்ளே 23 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து அந்த பெண்ணை விசாரணை நடத்திய போது அவர் கேரளா, திரிச்சூர், சாலக்குடியைச் சேர்ந்த தேவிகிருஷ்ணா (வயது 23) என்பது தெரியவந்தது. அவர் பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து சென்னையில் விற்பதற்காக கடத்திவந்ததாக தெரிவித்தார்.

அதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் பூக்கடை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். அதே போலே சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பார்மில் ஆர்பிஎப் எஸ்ஐ அஞ்சம்மா, தலைமைக்காவலர் சதீஷ்பாபு ஆகியோர் ரோந்து வந்தனர். அங்கு  நீலநிற பை ஒன்று நீண்ட நேரமாக அனாதையாக கிடந்தது. அதற்குள் சோதனை செய்த போது 20 மதுபாட்டில்கள் இருந்தன. மர்ம நபர்கள் ரயிலில் கடத்தி வந்து போலீசுக்கு பயந்து அங்கே போட்டு விட்டுச்சென்றது தெரியவந்தது. அவற்றை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மற்றொரு ரெய்டில் ரயில்வே போலீசார் கர்நாடக மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் எஸ்ஐ நாகேந்திரபாபு, காவலர் கணேசன் ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் அலுவலகத்துக்கு வெளியே கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது ரயில்வே பார்சல் அலுவலகத்தில் இருந்து 3 அட்டைப்பெட்டிகளுடன் ஒரு வாலிபர் வெளியே வந்தார்.

சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபரை மடக்கி பார்சலை பிரித்த பார்த்த போது உள்ளே 384 கர்நாடக மது பாட்டில்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். அந்த பார்சலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு ரயிலில் மனோஜ் என்பவர் பெயரில் அனுப்பியுள்ளது தெரியவந்தது. அது தொடர்பாக மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிடிபட்ட மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வந்த பெண் தேவிகிருஷ்ணா உள்ளிட்டோரை ரயில்வே போலீசார் சென்னை பூக்கடை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Translate »
error: Content is protected !!