சென்னை நகரில் சிறப்பாக காவல் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், தலைமைக்காவலர்கள் உள்பட 8 காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை நகரில் சிறப்பாக பணிபுரியும் போலீசாரை நேரில் அழைத்து பாராட்டுவதை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த வாரத்தில் சென்னை நகரில் கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் திறமையாக பணிபுரிந்த அதிகாரிகள், காவலர்களை கமிஷனர் நேரில் வரவழைத்து பாராட்டினார்.
அந்த வகையில் சென்னை , தி.நகர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயன், எஸ்ஐ தீர்த்தகிரி, தலைமைக் காவலர் முரளிதரன் ஆகியோர் செம்மஞ்சேரி, ஆலமரம் அருகே விஜயவாடாவைச் சேர்ந்த மோனீஸ் என்ற வாலிபரிடம்
இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர், செங்கல்பட்டு, நாவலூர், கழிபட்டூர் என்ற இடத்திலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, ஆந்திராவில் இருந்து கஞ்சா எடுத்து
வந்தது தெரியவந்தது.
குன்றத்தூர் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன், காவலர் கிருபாகரன், ஆயுதப்படை காவலர் மாரிமுத்து தனிப்படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஆயுதங்களுடன் வந்த ஐயப்பன்தாங்கல் மணியரசு (26) மற்றும் ராமச்சந்திரன்
ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த அதே பகுதியைச்
சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட அருகிலிருந்த நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் குணசேகரன், காவலர் மகுடீஸ்வரன் ஆகியோர் பாய்ந்து சென்று திருநாவுக்கரசுவை காப்பாற்றினர். அவர்கள் தக்க சமயத்தில் அவர்கள் துரிதமாக செயல்பட்டு காவல் நிலையம் முன்பு நடக்கவிருந்த இறப்பை தடுத்துள்ளனர்.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் மற்றும் ஆளிநர்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.