சென்னை பெருநகரில் 2021ம் ஆண்டு தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 157 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
01.6.2021 முதல் 05.6.2021 வரை பேசின்பாலம் பகுதியில் மனைவியை கொலை செய்த கணவர், அவரது தம்பி மற்றும் சங்கர் நகர் பகுதியில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1 குற்றவாளி உட்பட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடப்பு (2021)ம் ஆண்டில் இதுவரை தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட (01.01.2021 முதல் 5.6.2021 வரை) சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 101 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 29 குற்றவாளிகள், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 12 குற்றவாளிகள்,கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தியும், விற்பனை செய்த 12 குற்றவாளிகள், மற்றும் உணவு பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி மற்றும் கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி விற்ற 2 குற்றவாளிகள் என மொத்தம் 157 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1.ராஜி (எ) ஏழுகுரல் ராஜி (எ) லைட்ஹவுஸ் ராஜி, வ/30 (E-5 பட்டினப்பாக்கம் காவல் நிலையம்) 2.லோகேஷ் (எ) லோகேஷ்வரன், வ/29, (V-4 ராஜமங்கலம் காவல் நிலையம்) 3.அமர்நாத், வ/28, மற்றும் 4.சஞ்சய், வ/23 (J-13 தரமணி காவல் நிலையம்) ஆகிய 4 குற்றவாளிகள் 01.6.2021 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1.ரூபன், வ/32, த/பெ.எட்வர்டு, எண்.13, குருசாமி நகர் 5வது தெரு, புளியந்தோப்பு, சென்னை, இவரது தம்பி 2.ராம்கி (எ) ராம்குமார், வ/28, த/பெ.எட்வர்டு (அதே முகவரி) ஆகிய 2 பேர் மீது P-4 பேசின்பாலம் காவல் நிலையத்திலும், 3.கோபிநாத் (எ) கோபி, வ/24, த/பெ.ரமேஷ், எண்.6, எம்.ஜி.ஆர்.நகர் 1வது தெரு, பம்மல், சென்னை என்பவர் மீது S-6 சங்கர்நகர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ரூபன் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க P-4 பேசின்பாலம் காவல் நிலைய ஆய்வாளரும், கோபிநாத் (எ) கோபி என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க S-6 சங்கர்நகர் காவல் நிலைய ஆய்வாளரும் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள், மேற்படி 3 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 03.6.2021 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 3 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜுன் மாதத்தில் மட்டும் 01.6.2021 முதல் 5.6.2021 வரையில் சட்டம் ஒழுங்கு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள், என மொத்தம் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பேசின்பாலம் பகுதியில் ரூபனின் மனைவி சுப்ரியாவை கொலை செய்தது தொடர்பாக ரூபன் மற்றும் அவரது தம்பி ராம்குமார் மீது 1 கொலை வழக்கு உட்பட 2 கொலை வழக்குகளுடன் பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில் இருவரும் ஏற்கனவே ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோபிநாத் (எ) கோபி S-6 சங்கர்நகர் காவல் நிலைய சரித்திரி பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது அடிதடி வழக்குகள் என மொத்தம் 7 குற்ற வழக்குகள் உள்ளது. எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கட்ட பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை பொருட்கள் பதுக்கி விற்பவர்கள் மீது தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.