சென்னை
சென்னை நகரில் மாஞ்சா காத்தாடி பறக்க விட 144 சட்ட விதிப்படி 60 நாட்களுக்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாக்டவுன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சென்னை நகரில் 144 ஊரடங்கு உத்தரவு சென்னை நகர காவல்துறை சார்பில் அமல்படுத்தப்பட்டது. கடந்த 6 மாதங்களாக இந்த ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் தொடர்கிறது. லாக் டவுனால் இளைஞர்கள் வீட்டில் முடங்கியதால் காத்தாடி பறக்க விட தொடங்கினர். மாஞ்சா நுால் வானில் பறந்து மனித உயிர்களை பதம் பார்ப்பதால் அதற்கு தடை விதித்து சென்னை நகர காவல்துறை உத்தரவிட்டது. கடந்த 60 நாட்களாக மாஞ்சா நுால் பறக்க விட விதிக்கப்பட்டிருந்தது. நேற்றுடன் அது முடிவடைந்ததால் அந்த தடையை நீட்டித்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அது தொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது, இன்றில் இருந்து நவம்பர் மாதம் 13ம் தேதி வரை 60 நாட்களுக்கு மாஞ்சா காத்தாடி, சாதாரண காத்தாடி பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காத்தாடி விற்பதும், வாங்குவதும், அதனை சேமித்து வைப்பதோ, மாஞ்சா நுால்கள் விற்பனை செய்வதும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.