சென்னை போர்ட் டிரஸ்ட்டில் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ராஜாஜி சாலையில் போர்ட் டிரஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமாக இடிஎல்பி கட்டடம் உள்ளது. கடந்த மாதம் 17ம் தேதியன்று மர்ம நபர்கள் அங்கிருந்த இரும்பு தகரம் மற்றும் அலுமினிய பிரேம்களை திருடிச் சென்றனர். அது தொடர்பாக போர்ட் டிரஸ்ட் பொறியாளர் இளங்கோ வடக்கு கடற்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து இரும்பு தகடுகளை திருடிய மண்ணடியைச் சேர்ந்த முருகன் (எ) பெட்ரோல் முருகன் (42), சசி (38), வெள்ளை அருள் (எ) சிவா (37) பாஸ்கர் (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெட்ரோல் முருகன் வடக்கு கடற்கரை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் மீது 8 திருட்டு வழக்குகளும், சசி மீது 6 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.