சென்னை, ராஜமங்கலம் பகுதியில் சங்கிலிக் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்து பவுன் நகைகளை மீட்டனர்.
அவர்களிடம் இருந்து 6 பவுன் செயின், செல்போன், டூவீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை, கொளத்தூர், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சுஜாதா (வயது 39). கடந்த 7ம் தேதியன்று கொளத்தூர், ஜெயராம் நகர் முதல் மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது பல்சர் பைக்கில் வந்த 2 பேர் சுஜாதாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து சுஜாதா ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் மகேஷ்வரி, அண்ணாநகர் துணைக்கமிஷனர் ஜவகர் மேற்பார்வையில் ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டதிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பெரம்பூரைச் சேர்ந்த குமரன் (23), திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் (22) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள், 1 செல்போன்- மற்றும் பல்சர்பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் குற்றவாளிகள் இருவரும் கடந்த 1ம் தேதியன்று செம்பியம் பகுதியில் ஒரு நபரிடம் 1 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.