சீன செயலிகளை அச்சுறுத்தலாகப் பார்க்காமல் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருத வேண்டும்; செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று, சீனா கருத்து தெரிவித்துள்ளது.
சீனாவுடனான எல்லைப் பிரச்சனை வலுவடைந்ததை அடுத்து, சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதேபோல் நேற்று மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 A-வின் கீழ் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தது. இந்திய தேசத்தின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் பொது ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பதாக உள்ளதாக, மத்திய அரசு விளக்கமும் தந்தது.
இந்நிலையில், இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன பின்னணி கொண்ட மொபைல் செயலிகளுக்கு இந்தியா தொடர்ந்து தடை விதித்து வருவது கண்டிக்கத்தக்கது.
இதை, இந்தியாவும் – சீனாவும் பரஸ்பரம் தங்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டுமே தவிர அச்சுறுத்தலாக அல்ல என்று அது கேட்டுக் கொண்டுள்ளது.