சேலம்.
சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் கொரோனா சித்தா சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளது.
சித்தா சிகிச்சை மையம்
கொரோனா வைரஸ் உலக மக்களையே அச்சுறுத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சற்று குறைவாக இருந்த பாதிப்பு தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மூடப்பட்ட மையங்கள் தற்போது திறக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு மையம்
இந்த நிலையில் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சித்தா முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது. இது குறித்து சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசத்தொடங்கி உள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களுக்கு சித்தா முறையில் சிகிச்சை அளிப்பதற்காக இந்த மையம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் கொரோனா தொற்று முதல் நிலை அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் சித்தா மருந்துகளை டாக்டர்கள், காண்பித்தனர்.