சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது.. 7,588 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
சேலம்,
சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. இங்கு போட்டியிட்ட ராஜேந்திரன் 7 ஆயிரத்து 588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வடக்கு தொகுதி:-
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் அ.ம.மு.க. சார்பில் நடராஜன், மக்கள் நீதி மய்யம் சார்பில் குரு சக்கரவர்த்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஈஸ்வரன் உள்பட மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு 10.30 மணி வரை 29 சுற்றுகளாக நீடித்தது. முடிவில் தி.மு.க வேட்பாளர் வக்கீல் ராஜேந்திரன் 93 ஆயிரத்து 432 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கடாஜலம் 85 ஆயிரத்து 844 வாக்குகள் பெற்றார்.
அ.தி.மு.க வேட்பாளர் வெங்கடாசலத்தை விட தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் 7 ஆயிரத்து 588 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இதன் மூலம் சேலம் வடக்கு தொகுதியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது.
வாக்குகள் விவரம்
மொத்த வாக்குகள்-2,76,022
பதிவானவை-2,15,156
வக்கீல் ராஜேந்திரன் (தி.மு.க.)-93,432
வெங்கடாஜலம் (அ.தி.மு.க.)-85,844
குருசங்கரவர்த்தி (மக்கள் நீதிமய்யம்)-10,718
இமயஈஸ்வரன் (நாம் தமிழர்கட்சி)-8,155
நடராஜன் (அ.ம.மு.க.)-805
நோட்டா-1,539
இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் உள்பட 18 பேர் டெபாசிட் இழந்தனர். தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் மாறன் வழங்கினார்.