சென்னை, செப். 12–
பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் சார்பில் சென்னை ராயபுரம், ஆயிரம் விளக்கு பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பணியில் நேற்று ஈடுபட்டனர்.
சென்னை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கொரோனா லாக்டவுன் தொடங்கியதில் இருந்து சென்னை நகரம் முழுவதும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் அனைத்து மகளிர் போலீசார் குடிசைப்பகுதிகளுக்கு சென்று அங்கு வசிக்கும் பெண்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களை துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி பார்வையிட்டார். அங்குள்ள நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்து புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் அங்கு பணிபுரியும் பெண் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனையடுத்து ராயபுரம், எஸ்.எம். கோவில் தெருவில் உள்ள செட்டி தோட்டம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேற்கு மாதா கோவில் தெருவில் உள்ள குஜராத்தி காலனி மற்றும் ஆயிரம் விளக்கு, சுதந்திரா நகர் ஆகிய பகுதிகளுக்கு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி நேரில் சென்றார். அங்கு வசிக்கும் மக்களுக்கு
கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றியும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தயக்கமின்றி எந்த நேரத்திலும் காவல்துறையை அணுகலாம் என்று ஜெயலட்சுமி தெரிவித்தார்.
மேலும் கணினி வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு அளித்த அவர் இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தினார்.
அதனையடுத்து போலீசாருடன் இணைந்து அந்த பகுதிகளிலுள்ள சுமார் 100 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 100 குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், வரைபட புத்தகங்கள், பென்சில் மற்றும் வர்ணத்தூரிகைகள் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் சார்பில் வழங்கப்பட்டன.
Good job