சென்னை நகரில் கனமழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே சென்னை உட்பட வட மாவட்டங்களின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவில் தொடங்கி இன்று காலை வரை மழை பெய்தது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் வெளுத்துக் கட்டிய கனமழையால் மழைநீர் பல இடங்களில் தேங்கியது. சுரங்கப் பாலங்கள் மழை நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ள வானிலை மையம், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நெல்லை, விருதுநகர், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மயிலாப்பூரில் 200 மி.மீ., சென்னை டிஜிபி அலுவலகத்தில் 178 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அம்பத்தூர் – 90 மி.மீ., ஆலந்தூர் 78.5மி.மீ., சோழிங்கநல்லூரில் 77.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை தற்போதுதான் பெய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, சென்னை மாநகர மக்கள் வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 044- 2538 4530, 044- 2538 4540 ஆகிய எண்களையும், 24 மணி நேரம் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.