அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; இது தமிழகத்தை நோக்கி வரும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், பெரியளவில் சேதத்தை விளைவிக்காமல் கரையை கடந்துவிட்டது. எனினும் அந்த புயலில் தாக்கத்தில் இருந்தே இன்னும் வட தமிழகம், புதுச்சேரி மீளவில்லை.
இந்த நிலையில், மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்தி:
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது உருவான பிறகு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நவம்பர் 30ம் தேதிவாக்கில் தமிழக பகுதியை நோக்கி நகரும். எனவே, டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை, தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், வட தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம் என்று, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.