தமிழகத்தில் நடப்பது மக்களாட்சிதானா? சீறுகிறார் பாமக ராமதாஸ்

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா?  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அத்துடன், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திலும் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று டுவிட்டரில் அடுத்தடுத்து பதிவுகள் மூலம், தமிழக ஆளுநரை விமர்சித்துள்ளார். தனது முதலாவது பதிவில், மருத்துவக்கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகியும் இன்னும் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல…. திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

இன்னொரு பதிவில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்னதான் மரியாதை? தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக விடை காணப்பட வேண்டும் என்று, ராமதாஸ் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகல் தொடங்கிவிட்ட நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவுடன்,  மாநிலத்தில் ஆளும் அதிமுகவுடனும் பாமக கூட்டணி வைத்துள்ளது. இச்சூழலில் மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள மாநில ஆளுநரை ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Translate »
error: Content is protected !!