திடீரென சசிகலா மீது பரிவோடு பேசிய ஓ.பி.எஸ்… பின்னணியில் இப்படி ஒரு பிளானா..!

சென்னை,

திடீரென சசிகலா மீது பாசமாக பேசியுள்ளார் துணை முதல்வர் .பன்னீர்செல்வம். அதிமுகவுக்குள் உரசல்கள் இருப்பதாக வெளியே சொல்லிக்கொண்டாலும் பன்னீர்செல்வம் பேச்சின் பின்னால் பெரிய ராஜதந்திரம் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சமீபத்தில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ், சசிகலா மீது தனக்கு வருத்தம் இல்லை என்றும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில சந்தேகங்கள் பொதுவெளியில் அவர் மீது விழுந்தன.

எனவே விசாரணை கமிஷன் கேட்டு விசாரிக்க கூறினேன் என்று சாஃப்டாக பேசியுள்ளார். அதாவது சசிகலா மீதான பழியை துடைக்க தான் முயன்றதாக ஒரே போடாக போட்டுள்ளார் ஓபிஎஸ் இந்த பேட்டியை பார்த்த பிற கட்சியினர் கண்டிப்பாக திடீரென சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் பேசுகிறார். இதுவரை அவர் சசிகலா பற்றி வாய் திறக்காமல் மவுனமாக இருந்து வந்தார்.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் தேர்தல் நேரத்தில் பன்னீர்செல்வம் கலகம் செய்கிறார் என்றெல்லாம் நினைக்கக் கூடும். ஆனால் விசயமே வேறு என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். சட்டசபை தேர்தலின்போது பன்னீர்செல்வம் விரும்பிய தனது ஆதரவாளர்களுக்கும் சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வம் இணைந்துதான் வேட்பாளர் தேர்வை நடத்தினர்.

ஓபிஎஸ் அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தால் அப்போது வெளிப்படுத்தி இருக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எப்படி அதிருப்தி வெளிப்படுத்துவார் என்று கண்சிமிட்டுகிறார்கள் அதிமுக வட்டாரத்தில். அப்படி என்றால், என்னதான் விஷயம் என்கிறீர்களா. மேட்டர் இதுதான்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது டிடிவி தினகரன் புதிதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கியிருந்தார்.

கடைசி நேரத்தில்தான் பரிசுப்பெட்டி சின்னம் கூட வழங்கப்பட்டது. அப்படியிருந்தும், ராமநாதபுரம் , திருச்சி, மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களில் அந்தக் கட்சி சராசரியாக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளை வாங்கி இருந்தது. இப்போது தேமுதிக தினகரன் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் பிறகு தினகரன் பிரச்சாரத்தில் எழுச்சி தெரிகிறது. எனவே தென் மாவட்டங்களில் அதுவும் முக்குலத்தோர் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் தினகரன் அதிமுக வாக்கு வங்கியை வேட்டையாடி விடுவார் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் வெளியிட்ட புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் கூட மேற்கு மண்டலத்தில் அதிமுக பலமாக இருந்த போதிலும் தெற்கு மண்டலத்தில் பலவீனமாக இருப்பதாகவும் திமுக முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் சசிகலா மீது சாப்ட்டாக பேசியுள்ளார் பன்னீர்செல்வம். தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுகவில் போட்டியிடுகிறார்கள்.

சசிகலா தங்கள் பக்கம் இருப்பதாக காட்டிக் கொள்வதன் மூலம் தினகரனுக்கு செல்லும் வாக்குகளை தடுத்து நிறுத்த முடியும் என்று நினைக்கிறார் பன்னீர்செல்வம். இதுபற்றி ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தி விட்டு தான் இப்படி ஒரு பேட்டியை கொடுத்திருப்பதாக அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். அரசியலுக்கு ஓய்வு என்று சசிகலா அறிவித்துள்ளார்.

அதன் மூலம் மறைமுகமாக அதிமுகவுக்கு தான் ஆதரவளிப்பதாக அதிமுக தொண்டர்கள் நம்புகிறார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ், சசிகலா பற்றி இரக்கத்தோடு பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருபக்கம் திமுக தலைவர்கள், சசிகலாவுக்கு அதிமுக தலைவர்கள் துரோகம் செய்துவிட்டதாக கூறி பெண்கள் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்கள். எனவே அதற்கும் செக் வைக்க இந்த பேட்டி உதவும் என ஓபிஎஸ் நினைத்திருக்க கூடும். ஓபிஎஸ் கையில் எடுத்துள்ள இந்த ராஜதந்திரமும் பலனளிக்குமா இல்லையா என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும்.

Translate »
error: Content is protected !!