சென்னை,
இன்று ஸ்டாலின் வேட்பாளர் லிஸ்ட் அறிவிக்க உள்ளார். இன்றைய தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. கலைஞர் இருந்தபோது இந்த அளவுக்கு சீட் பேரம் நடந்தது இல்லை. கூட்டணிகளிடம் அதிருப்தி இருந்தாலும், அதை நாசூக்காக கையாண்டு, கழட்டி விடுவார். அல்லது அரவணைத்து கொள்வார். இப்போது அப்படி இல்லை.
கூட்டணிகள் இல்லாமலேயே தேர்தலை சந்திக்கவும் திமுக தயாரானது. திமுகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமின்றி, அதிமுகவை விமர்சிப்பதும் திமுகவுக்கு ஒரு விளம்பர யுக்திதான். ஆனால், கூட்டணிகளிடம் பேச்சுவார்த்தையை ஒரு முடிவுக்கு கொண்டு வராமல், அவர்களை திணறடித்து கொண்டே, அதேசமயம், மக்களின் எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுக் கொண்டு, மற்ற அரசியல் கட்சிகளையும் உசுப்பேத்தி விட்டு கொண்டே இருப்பதும் திமுகவின் ஒரு விளம்பர டெக்னிக் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இன்னின்ன கட்சிகளுக்கு இத்தனை இத்தனை சீட்கள், என்று ஒதுக்கிவிட்டிருந்தால், இந்த எதிர்பார்ப்புகள் இந்நேரம் காணாமல் போயிருக்கும். தங்களிடம் ஒரு டிமாண்ட் இருப்பது போலவே காட்டி கொண்டதுதான் திமுகவின் தேர்தல் யுக்திகளில் ஒன்று என்கிறார்கள். அதனால்தான் கூட்டணி கிடையாது என்று கமலே ஒதுங்கி சென்றாலும், மய்யத்துடன் கூட்டணி என்பது போல, ஒரு பிரமையை ஏற்படுத்தி கொண்டே இருந்தது திமுக.
ஒருகட்டத்தில் கமல் இதை ஓபனாக உடைத்துவிட்டார். “எதுக்காக எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்று திமுக சொல்லி வருகிறது? நாங்கள்தான் தனித்து போட்டி என்று சொல்லிவிட்டோமே” என்றும் சொல்லி இருந்தார். இருந்தாலும், திமுக தன் பாணியை கைவிடவில்லை. கடைசிவரை மய்யத்துடன் கூட்டணி இல்லை என்றும் சொல்லவில்லை. இதெல்லாம் கூட ஒருவகை அரசியல் விளம்பரமே. தங்கள் கட்சிக்கு மவுசு கூடுகிறது என்பதை காட்டி கொள்ளும் மனோபாவம்தான் இந்த போக்கு என்கிறார்கள்.
ஆக மொத்தம், பெரும்பாலான 170 சீட்டுக்களை கையில் வைத்து கொண்டு, மிச்சமுள்ளதை கூட்டணிகளுக்கு ஒதுக்குவதற்கு இத்தனை பில்ட்டப்புகளையும் திமுக செய்து வந்துள்ளது என்றே தெரிகிறது. ஆனாலும், கூட்டணிகள் திருப்தியுடன்தான் இருக்கின்றனவா? முழு மனசுடன்தான் தேர்தல் பணியில் இறங்கி பார்ப்பார்களா? தெரியவில்லை.