சென்னை,
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிமுக வசம் இருந்த 56 தொகுதிகளை திமுக தன் வசப்படுத்தியுள்ளது, அதேபோல திமுகவிடம் இருந்த 14 தொகுதிகளை இந்த முறை அதிமுக வென்றுள்ளது.
கடந்த மே 2ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் திமுக வென்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார்.
இந்தத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வென்றுள்ளது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுடன் சேர்த்து திமுக மொத்தம் 133 இடங்களில் வென்றது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களிலும் விசிக 4 இடங்களிலும் இரு இடதுசாரிகள் கட்சிகளும் தலா 2 இடங்களிலும் வென்றன.
மறுபறும் அதிமுக இந்தத் தேர்தலில் 66 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக 5 இடங்களிலும், பாஜக நான்கு இடங்களிலும் வென்றன. கடந்த 2001க்கு பிறகு தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக வென்றுள்ளது இதுவே முதல்முறையாகும். அதேநேரம் இந்தத் தேர்தலில் பல சுவாரசிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்தத் தேர்தலில் அதிமுக தனது வசம் இருந்த 56 இடங்களை திமுகவிடம் கோட்டைவிட்டுள்ளது. மேலும், பானை சின்னத்தில் போட்டியிட்ட தொல் திருமாவளவனின் விசிக மூன்று தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கைப்பற்றியுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக நான்கு இடங்களையும் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஒரு இடத்தையும் அதிமுகவிடம் இருந்து பெற்றுள்ளது.
அதேபோல காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கும் அதிமுகவிடம் இருந்து தலா ஒரு தொகுதி சென்றுள்ளது.மறுபுறம் திமுக தனது வசம் இருந்த 14 தொகுதிகளை அதிமுகவிடம் இழந்துள்ளது. மறுபுறம் கடந்த 2016இல் திமுக வென்ற இடங்களில் மூன்று தொகுதிகளில் இந்த முறை பாமக வெற்றி வாகை சூடியுள்ளது. அதேபோல திமுக தொகுதிகளில் இரண்டில் பாஜக இந்த முறை வென்றுள்ளது.