திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.
வரலாறு:-
1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது.
இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.
1953 சூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.
1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.
1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது.
1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.
ஏப்ரல் 19, 1961இல் அக்கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961இல் திமுக பேரணி நடத்தியது.
1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார்.
1963இல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 சூன் 8, 9, 10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.
“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது.
அதே ஆண்டில் நவம்பர் 17இல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க.
தி.மு.க.வினர் ஆட்சி செய்த காலம்:-
1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார்.
அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க:-
1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது.
புதுவை, காரைக்கால், கருநாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது. இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.
பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது.
2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.