கொரோனா பரவல் கருதி, திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
கார்த்திகை தீபம் என்றாலே, வீடுகளில் அகல் விளக்கு ஏற்றும் வைபவத்துடன், திருவண்ணாமலை தீப விழாவும்தான் நினைவுக்கு வரும். ஆண்டு தோறும் கார்த்திகை தீபவிழா, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசித்து வந்தனர்.
எனினும், இந்தாண்டு கொரொனா தொற்று பரவலால், கடும் கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ம் தேதி,தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள், வரும் 29ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
கார்த்திகை மகா தீபத்தையொட்டி, திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
வெளியூர் பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலை நகரத்தை சுற்றி 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, உள்ளே வராத வகையில் சோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.