வாடிப்பட்டி ஊராட்சியில், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அவதியாக உள்ளதால், இதை சரி செய்ய வேண்டுமென்று பொதுமக்கல் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட வாடிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாளாக கனமழை பெய்தது. இதனால், குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறனர். கிராம பகுதிகளில் போதிய கால்வாய் இல்லாததால் தண்ணீர் வெளியேற முடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது.
இதனால், கொசுக்கள் தண்ணீரை மொய்க்கத் தொடங்கிவிட்டன. எனவே, டெங்கு போன்ற நோய்கள் பரவுமோ என்று பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டுமென்று அதிகாரிகளும் அக்கறை காட்டுவதில்லை என்று, மக்கள் வேதனையோடு கூறுகின்றனர்.
எனவே, தேனி மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்; தண்ணீர் செல்ல ஏதுவாக கால்வாய் அமைத்து தர வேண்டுமென்று வாடிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.