தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் சோதனைச்சாவடி அமைத்து, வரும் வாகனங்களில் இ–பதிவு முறையாக உள்ளதா? அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் வெளியே செல்கிறார்களா? தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகிறார்களா? என்று காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி ரயில்வே கேட் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வியும் காவலர்களுடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி நிறுத்தினார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முகக் கவசம் அணியாமல் இருந்தார்.தான் காவல்துறையில் பணிபுரிவதாக அந்த நபர் கூறியதைக் கேட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி,
காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு முகக்கவசம் அணியாமல் செல்கிறாயா? என்று கோபமாகக் கூறி, உடனடியாக மற்ற காவலர்களை அழைத்து அந்த நபரின் வாகனத்தை பறிமுதல் செய்து அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்குமாறு தெரிவித்தார்.
உடனடியாக காவலர்கள் அந்த காவலரின் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவருக்கு 200 ரூபாய் அபராதமும் விதித்தனர். அந்தக் காவலரின் பெயர் ரஞ்சித்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையைச் சேர்ந்த ஒருவருக்கே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபராதம் விதித்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்திருப்பது தேனி மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.