தேனி மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் பால் பெற்று வந்த தனியார் நிறுவன உரிமையாளர் தலைமறைவு.பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தில் மீனாட்சி அக்ரோ புக் டிரேடிங் என்ற பால் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிறுவனம் குமனந்தொழு, கடமலைக்குண்டு, தெய்வேந்திரபுரம், ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரம், தேவாரம், பத்ரகாளிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் கடந்த 6 மாதங்களாக தினசரி பால் பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மூடப்பட்டு அதன் உரிமையாளரான பாண்டியராஜன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிப்படைந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், கரோனா நோய் பரவலால் எங்களிடம் கொள்முதல் செய்து வந்த பாலை அரசு குறைத்துக் கொண்டதால் தான், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கி வந்தோம். ஆனால் தற்போது அந்த நிறுவனமும் உற்பத்தியாளர்களுக்கு தரவேண்டிய பணம் ரூபாய் 2 கோடி வரை தராமல் அதன் உரிமையாளர் தலைமறைஆகிவிட்டார். இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இது சம்பந்தமாக சின்னமனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வரவேண்டிய பணம் சுமார் இரண்டு கோடியை பெற்றுத்தருமாறு ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.