தேனி மாவட்டம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்கிட 983 இளைஞர்களுக்கு ரூ.7.41 கோடி மானியத்துடன் கூடிய ரூ.29.66 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் (NEEDS) கீழ் கடனுதவி பெற்று ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் சிவா வீவிங் மில் மற்றும் போடிநாயக்கனூரில் செயல்பட்டு வரும் என்.ஜி.கார்மெண்டஸ் ஆகிய நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது,
தமிழக அரசு தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்கிட விருப்பமுள்ள தொழில் முனைவோர்களை கண்டறிந்து,
அவர்களை ஆற்றல் மிக்க தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்திலும், அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி அளித்து புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டும்,
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் திட்டத்தின் (NEEDS) கீழ் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.5.00 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்கிட முறையே ரூ.5.00 இலட்சம், மற்றும் ரூ.10.00 இலட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கி தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றி வருகிறது.
தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் (NEEDS) கீழ் ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் சிவா வீவிங் மில் ரூ.25.00 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.1.10 கோடி கடனுதவி பெற்று செயல்பட்டு வருகிறது. போடிநாயக்கனூரில் செயல்பட்டு வரும் என்.ஜி.கார்மெண்டஸ் ரூ.3.65 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.17.00 இலட்சம் கடனுதவி பெற்று செயல்பட்டு வருகிறது.
இன்றைய தினம் இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்நிறுவனங்கள் மாதந்தோறும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை முறையாக செலுத்தி நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. எனவே, மாவட்டத்தில் புதிய தொழில் தொடங்கிட படித்து வேலை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்தினை தொடர்பு கொண்டு, பயனடையலாம் எனத்தெரிவித்தார்.