தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறிய திமுக வேட்பாளர்,., அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள்; வேட்புமனு தாக்கல் செய்ய அனைவரும் முண்டியடித்ததால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு;
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் ராமநாதபுரம், பரமக்குடி முதுகுளத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. திருவாடனை தொகுதியில் மட்டும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
இதில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் ‘காதர்பாட்சா முத்துராமலிங்கம்‘ போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய அதிகமான வாகனங்களிலும் சாலையை மறைத்துக் கொண்டு ஊர்வலமாக நடந்து வந்தனர். இதனை அனுமதிக்க மறுத்த காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து இரண்டு பேர் ஆக மொத்தம் 3 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டுமென தேர்தல் விதிமுறை உள்ள நிலையில், அதை மீறி அலுவலகத்தின் வாயிலில் நின்று கூடுதலாக ஆட்கள் செல்வோம் என அதிகாரிகளிடம் அத்து மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போலீசாரின் கடும் எச்சரிக்கைக்கு பிறகு மூன்று பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் “காதர்பாஷா முத்துராமலிங்கம்” மீண்டும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து வெளியேறி வந்தபோது சாலையை வழிமறித்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிட்டபடி சாலையின் நடுவே நின்றதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஆம்புலன்ஸுக்கு வழி விட முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இவ்வளவு அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது அதிருப்தியும் அருவெறுப்பும் ஏற்பட்டுள்ளது.