சென்னை
தோழி திட்டத்தின் கீழ் ஒரே வாரத்தில் 97 பெண் குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் சந்தித்த அனைத்து மகளிர் போலீசார் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அரவணைப்பு காட்டினர்.
சென்னை நகரில் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்காக தமிழகத்தில் தோழி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இந்த செயல்பாடு சென்னை நகரம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் இந்த ‘தோழி’ திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பாலியல் குற்றங்களில் பாதிப்படைந்த பெண் குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் வாரந்தோறும் அனைத்து மகளிர் போலீசார் அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்து வருகின்றனர். அதன்படி இந்த வாரம் 97 குழந்தைகளை அனைத்து மகளிர் போலீசார் அவர்களது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தனர். அவர்களது தற்போதைய சூழ்நிலைகளைப் பற்றி கேட்டறிந்தனர். அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் வாழ்வாதார உரிமைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கவும் ஆவண செய்து கொடுத்துள்ளனர். போக்சோவால் பாதிப்படைந்த குழந்தைகளின் கல்வி, தங்கு தடையின்றி தொடரவும் தேவையான மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கியும் சமுதாயத்தில் அவர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் இருந்து சாதாரண சூழ்நிலைக்கு திரும்பவும் தகுந்த ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் அந்த குழந்தைகளுக்கோ அவரது உறவினர்களுக்கோ எதிரிகளாலும், அவர்களைச் சார்ந்தவர்களால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் காவலன் SOS செயலியை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலவச அவசர உதவி எண்களான 1091, 1098, 9150250665 (கட்டுப்பாட்டறை எண்) ஆகியவற்றை தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வு காணலாம் என அறிவுறுத்தப்பட்டது.
**