சென்னையில் நகை அடகு நிறுவனத்தில் திருடிய ஊழியர் உட்பட மூவர் கைது….28.5 சவரன் நகைகள் பறிமுதல்

சென்னை,

ஆவடியில், பிரபல நகை அடகு நிறுவனத்தில் தங்க நகைகளை திருடி போலியான தங்க நகைகளை வைத்து மோசடி செய்த ஊழியர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை, ஆவடி, சிடிஎச் ரோட்டில் பிரபல கோல்டு லோன் நிறுவனம் உள்ளது. இங்கு மேலாளராக பணிபுரிபவர் ஜெயகர் (42). இவர் கடந்த 3ம் தேதியன்று அன்று தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் கொரட்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் 986.25 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனுப்பியுள்ளார்.

தங்க நகைகளை பெற்றுக்கொண்ட சதீஷ்குமார் அதில் 28.5 சவரன் எடையுள்ள தங்கநகை பார்சலை பிரித்து, தங்க நகைகளை எடுத்துக் கொண்டு அதற்கு பதில் போலியான தங்க நகைகளை வைத்து தி.நகர் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

தி.நகர் நிறுவன ஊழியர்கள் அதை பெங்களூரில் உள்ள கிளை நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பெங்களூரில் ஊழியர்கள் தங்க நகைகளை சரிபார்த்த போது ஆவடி கிளையிலிருந்த வந்த பார்சலில் இருந்த 28.5 சவரன் தங்க நகைகள் போலியானது என்பது தெரியவந்தது. இது குறித்து ஆவடி கிளை மேலாளர் ஜெயகரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அவர் அது தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அதனையடுத்து சதீஷ்குமார் (வயது 30), ஷோபா (40), ரஞ்சித் () கண்ணன் (34) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 28.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் தங்க நகைகளை திருடி தனக்கு அறிமுகமான ஷோபா என்பவரிடம் கொடுத்துள்ளார். ஷோபா தனது நண்பர்  ரஞ்சித் () கண்ணனிடம் கொடுத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Translate »
error: Content is protected !!