மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பிரபல நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார். போராடும் விவசாயிகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இப்போராட்டத்திற்கு, பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கொரொனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர்.
நாளும், பொழுதும் பாடுபட்டால் தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு, கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப் பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.
தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளைப் பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்டப் பல பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் உழவர் சமூகம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாக பாதிப்படைவோம் என கருதுகிறார்கள்.
எனவே, இந்தச் சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோள், போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று நடிகர் கார்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.