நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதித்த நபர் சிக்கினார்

நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதித்த நபரை தேனாம்பேட்டை போலீசார் மரக்காணத்தில் வைத்து கைது செய்தனர்.

நேற்று மதியம் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் பேசிய மர்ம நபர் சென்னை, ஆழ்வார்பேட்டை, சீத்தாம்மாள் காலனியில் உள்ள நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்து விட்டார். அது தொடர்பாக தேனாம்பேட்டை உடனடியாக மிரட்டல் ஆசாமி சொன்ன முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கெஸ்ட் அவுஸ் இயங்கி வருவது தெரியவந்தது. நடிகர் சூர்யாவின் அலுவலகம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த முகவரியில் இருந்ததும், தற்போது அதனை காலி செய்து அடையாறு சென்று விட்டதாகவும் தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்தது.

தி.நகர் காவல் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் மூலம் விசாரணை நடத்தியதில் மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கூனிமேடு குப்பத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் (20) என தெரியவந்தது. தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு புவனேஷ்வரை பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மனநலக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து துரித விசாரணை நடத்திய குற்றவாளியை கண்டுபிடித்த தேனாம்பேட்டை போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

 

 

 

Translate »
error: Content is protected !!