சென்னை
2 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறிய ரவுடி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால் அவரை 465 நாட்கள் சிறையில் அடைத்து புனிததாமஸ் மலை துணைக்கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டார்.
சென்னை, வேளச்சேரி, பவானி நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 21). இவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பால்ராஜ் கடந்த 10.12.2019 அன்று புனித தோமையர்மலை துணைக்கமிஷனர் பிரபாகர் முன்பு ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 2 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால், பால்ராஜ் கடந்த 31.08.2020 அன்று ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டதன்பேரில், கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கோர்ட் உத்தரவின் பேரில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து பால்ராஜ் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறியதால் செயல்துறை நடுவராகிய புனித தோமையர்மலை துணைக்கமிஷனர் பிரபாகர் பால்ராஜ் மீது கு.வி.மு.ச. பிரிவு 110ன் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். அதன்படி பால்ராஜ், நன்னடத்தை பத்திரத்தில் எழுதிக் கொடுத்த 2 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 465 நாட்கள் ஜாமினில் வெளிவரமுடியாத சிறை தண்டனை விதித்து துணைக்கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டார். அதன்பேரில் பால்ராஜ் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.