இரண்டு முறை நன்னடத்தை விதியை மீறிய ரவுடியை 221 நாள் நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்க சென்னை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
துணைக்கமிஷனர் விக்ரமன்
சென்னை நகரில் ரவுடிகளை ஒழிக்க போலீசார் சட்டப்படி தற்போது புதிய முறையை கையாண்டு வருகின்றனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை முற்றிலுமாக ஒடுக்க இந்த புதிய முறை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அடிக்கடி ரவுடித்தனத்தில் ஈடுபடும் ரவுடிகளுக்கு அவர்கள் திருந்தி வாழ்வதற்கு போலீசார் ஒரு சந்தர்ப்பம் அளிக்கின்றனர். அவ்வாறு திருந்தி வாழ விரும்பும் ரவுடிகளிடம் அந்த சரக துணைக்கமிஷனர் முன்னிலையில் ஆஜராகி ஒரு பாண்டு பத்திரத்தில் நன்னடத்தை உறுதிமொழி ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறப்படும். அதன்படி அந்த குற்றவாளி 1 ஆண்டோ அல்லது 2 ஆண்டுகளோ எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் இருந்தால் அவர் காவல் நிலைய ரவுடிகள் வரலாற்றுப்பதிவேட்டில் இருந்து நீக்கவும் வாய்ப்பும் உள்ளது. மாறாக அவர்கள் அதனை மீறினால் நன்னடத்தையுடன் இருந்த நாட்கள் தவிர மீதி எத்தனை நாட்களுக்கு அவர் உறுதியளித்தாரோ அந்த நாட்கள் முழுவதும் அவர் சிறையில் கழிக்க வேண்டும். துணைக்கமிஷனரிடம் உறுதியளித்ததால் ஒப்பந்தத்தை மீறியதற்காக அவரே செயற்முறை மாஜிஸ்திரேட்டுக்குறிய அதிகாரத்தின்படி அதற்குரிய தண்டனையை துணைக்கமிஷனரே வழங்கலாம் என சட்டவிதி முறை உள்ளது. அதன்படி குற்றவாளியை சிறையில் அடைக்க துணைக்கமிஷருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை நகரில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது துணைக்கமிஷனர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடி முத்துவேல்
சென்னை, கண்ணகிநகர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 27). இவர் கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த களியா என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். பிரபல ரவுடியான இவர் மீது கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. முத்துவேல் மீதான கொலை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் அவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் அவரது நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் பொருட்டும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவி மாதம் 8ம் தேதியன்று முத்துவேல் சென்னை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் முன்பு ஆஜரானார். அன்றைய தினத்தில் இருந்து ஒரு வருட காலத்திற்கு நன்னடத்தையுடன் இருப்பதாகவும் குற்றச்செயல்கள் எதிலும் ஈடுபட மாட்டேன் எனவும் அதற்குறிய சாட்சிகள் இருவர் முன்னிலையில் பிணைப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் தன் பிணைகாலம் முடிவடையும் முன்னரே 1.7.2020 அன்று தன் நண்பர்களுடன் சேர்ந்து முத்துவேல், முருகவேல் (வயது 34) என்பவரை கத்தியால் வெட்டியள்ளார். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேலுவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளிவந்தார். மீண்டும் கடந்த 3ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணகி நகர் 21 வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை இரும்புராடு, உருட்டுகட்டைகளால் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துவேலுவை மீண்டும் போலீசார் கைது செய்து கடந்த 4ம் தேதியன்று சிறையில் அடைத்தனர்.
திருந்தி வாழ்வதாக உறுதியளித்து நன்னடத்தை உறுதிப்பத்திரத்தில் கையெழுத்து இட்டபின்னர் இரண்டு முறை விதிகளை மீறியதால் முத்துவேல் மீது கண்ணகி நகர் போலீசார் கடும் நடவடிக்கையில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து செயல்முறை நடுவர் நீதிமன்றம் மற்றும் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் குற்றவிசாரணை முறைச்சட்டம் 122 1(b) ன்படி முத்துவேல் நன்னடத்தையுடன் இருந்த காலமான 144 நாட்கள் போக மீதி 221 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். நன்னடத்தை பிணையை மீறி குற்றம் புரிந்த ரவுடி மீது தகுந்த நடவடிக்கை எடுத்த அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனையும், கண்ணகி நகர் போலீசாரையும் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.