வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், வரும் 1ம் தேதி ஈரோட்டில் இருந்து திமுக தொடங்குகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் ஆலோசனைகளை தொடங்கி, வியூகங்களை வகுத்து வருகின்றன.
அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி இருக்கிறது. டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான குழு, இப்பணிகளை செய்து வருகிறது.
அதேபோல், பாரதிய ஜனதா கட்சி, ‘வேல் யாத்திரை’ என்ற பெயரில் தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்கவுள்ளது. பாமக, காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சிகளும் தேர்தல் ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை முதலாவதாக திமுக தொடங்கவுள்ளது. திமுக தனது முதற்கட்ட பிரச்சாரத்தை “தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில், சிறப்பு பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளது.
இது குறித்து திமுக தரப்பில் இன்று வெளியான அறிக்கையில், தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் நவம்பர் 1 ஆம் தேதி பிரச்சாரத்தை மு.க. ஸ்டாலின் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டையில் கலைஞர் சிலை திறப்பு விழாவுடன் இணைந்து பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. நவம்பர் 3 விருதுநகர், நவ. 5 இல் தூத்துக்குடி, நவ.7இல் வேலூர், நவ. 8ம் தேதி நீலகிரி, நவ.9ம் தேதி மதுரை, நவ. 10ம் தேதி விழுப்புரத்தில் திமுக பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும்.
இக்கூட்டங்களில், சென்னையில் இருந்தவாறே காணொலி காட்சி வழியாக மு.க. ஸ்டாலின் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.