சென்னையில் நடந்த மருத்துவக்கலந்தாய்வில் நீட் தேர்வு தொடர்பாக போலி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்த மாணவி மற்றும் அவரது தந்தையைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 18ம் தேதி முதல் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் மருத்துவத்துறைக்கான கலந்தாய்வு சேர்க்கை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 7-ம் தேதி ராமநாதபுரம், பரமக்குடியைச் சேர்ந்த தீக்சா (வயது 18) என்ற மாணவி, தனது தந்தை பாலச்சந்திரனுடன் கலந்தாய்வுக்கு வந்தார். அப்போது அவர் அளித்த ஆவணங்களை கவுன்சிலிங்கில் பங்கேற்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவை அனைத்தும் போலி என தெரியவந்தது.
அந்த மாணவி நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் 610 மதிப்பெண்கள் எடுத்தது போல போலியான சான்றிதழ்கள் தயார் செய்து அதனை அவர் மருத்துவ கலந்தாய்வு கூட்டத்தில் சமர்ப்பித்தது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்ககத்தின் தேர்வு கமிட்டி செயலாளர் செல்வராஜன் பெரியமேடு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுதொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாலச்சந்திரன் மற்றும் அவரது மகள் தீக்சா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.