பணத்திற்காக மாற்றுத்திறனாளி இளைஞரை கொலை செய்த வீட்டு வேலைக்காரர் கைது

சென்னை,

ரூ.20 லட்சம் பணத்திற்காக மாற்றுத்திறனாளி இளைஞரை தலையணையால் அமுக்கிக் கொலை செய்த வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32). மாற்றுத்திறனாளியான இவர் சென்னை ஈக்காட்டு தாங்கல், அச்சுதன் 3வது தெருவில் வீடு எடுத்து ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

விக்னேஷை கவனிப்பதற்காக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவர் சம்பள அடிப்படையில் விக்னேசுடன் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை விக்னேஷ் அறையில் இறந்து கிடப்பதாக அவரது உறவினருக்கு ஆறுமுகம் தகவல் அளித்துள்ளார். கிண்டி போலீசாருக்கும் போன் செய்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விக்னேஷிற்கு ஏற்கெனவே இதய கோளாறு பிரச்சனை இருந்து வந்ததாகவும், அது தொடர்பாக பல மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசாரிடம் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

ஆனால் விக்னேஷின் முகத்தில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஆறுமுகத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். இதில் உண்மை வெளிவந்தது. விக்னேஷிற்கு வங்கி கணக்கில் ரூ. 20 லட்சம் பணம் இருப்பு இருந்துள்ளது.

அதனை அறிந்த ஆறுமுகம் அந்த பணத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அது தொடர்பாக தனது நண்பரான நாராயணசாமியிடம் கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணத்தை அபகரிக்க விக்னேஷிற்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இதய பிரச்சனை காரணமாக விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதனை பயன்படுத்தி விக்னேஷை கொலை செய்ய ஆறுமுகம் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று விக்னேஷ் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது தலையணையால் அமுக்கி ஆறுமுகமும், நாராயணனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பின்னர் இதய பிரச்சனை காரணமாக விக்னேஷ் இறந்ததாக நாடகம் ஆடியுள்ளார். பணத்திற்காக கொலை செய்த ஆறுமுகம் மற்றும் தூண்டியதாக அவரது நண்பர் நாராயணசாமியை போலீசார் கைது செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!