பயோ மைனிங் திட்டம்.. 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக மாற்றம்

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் இதுவரை 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது

குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. தனியார் அமைப்பின் வாயிலாக பயோ மைனிங் திட்டம் தினமும் 40 டன் வரை குப்பைகள் அழிக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பயோ மைனிங் திட்டத்தின் முதல் கட்டத்தில் 9 லட்சம் கியூபிக் மீட்டர் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை இத்திட்டத்தில் 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் அழிக்கப்பட்டு உரமாக்கப்பட்டுள்ளன. இதில் பிளாஸ்டிக் பொருட்கள், கட்டிட கழிவுகளும் அடங்கும். திட்டத்தின் இரண்டாம் கட்டம் குறித்து அண்ணா பல்கலைக்கழக குழுவினர் விரைவில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்,’’ என்றார்.

Translate »
error: Content is protected !!