பலே ஆசிரியர்… சோகக்கதை கூறி 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி…!

கோவை அருகே தலைமை ஆசிரியராக பணிபுரியக்கூடிய பெண் கண் கலங்க வைக்கும் படி தன்னுடைய சோக கதையை தன்னுடன் பழகக்கூடியவர்களிடம் கூறி 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணங்களை வாங்கி மோசடி செய்த பெண் தலைமை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை, கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் கார்த்திக். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பொன்னே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் மாலதி என்பவரும் கார்த்திக் குமாருக்கு நன்கு அறிமுகமானவர்.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மாலதி தன்னுடைய மகள் திவ்யபாரதி திருமணத்திற்காக 10 லட்ச ரூபாயை கார்த்திக் குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது, கார்த்திக் குமார் தனது சகோதரரிடம் இருந்த பத்து லட்ச ரூபாயை வாங்கி மாலதியிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் 2019ம் ஆண்டு மாலதி தன்னுடைய மகன் நரேந்திரனுக்கு கல்லூரி படிப்பிற்காக மீண்டும் 10 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். அப்போது, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கார்த்திக்குமார் கூறியிருக்கிறார்.

பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தால் தான் விருப்ப ஓய்வு பெற்று அந்த பணத்தை திருப்பித் தருவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து, கார்த்திக் குமார் தன்னுடைய உறவினர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாய் கடனாக பெற்று மாலதியிடம் கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில், கார்த்திக் குமார் பலமுறை பணத்தை கேட்டும் மாலதி திருப்பித் தராமல் இருந்து வந்தார். மேலும் இதற்கு மாலதி செக் கொடுத்திருக்கிறார். ஆனால், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. தொடர்ந்து கோவை கணபதி பகுதியில் உள்ள மாலதியின் வீட்டிற்கு கார்த்திக் குமார் சென்று பார்த்தார்.

அப்போது, இதே போல ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரியை ரீட்டா என்பவரிடம் இருந்து 10 லட்ச ரூபாயும், தீபக் என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாயும், சிவசாமி என்பவரிடம் மூன்று லட்சம் ரூபாயும், தர்மராஜ் என்பவரிடம் 6 லட்ச ரூபாயும், ராஜாமணி என்பவரிடம் ஏழு லட்ச ரூபாயும் என பலரிடமும் 50 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, கார்த்திக் குமார் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியை மாலதியை தேடி வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பலரிடம் 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!