பல கோடி லஞ்ச லஞ்ச ஊழல் வழக்கில் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அங்கு கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிந்து வரும் பாண்டியனின் அலுவலகத்தில் இருந்து ரூ. 89,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாண்டியனின் சாலிகிராமம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 1 கோடியே 32 லட்சம் ரூபாய் ரொக்கம், மூன்று கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவையும் சிக்கின. அதோடு மட்டுமல்லாது ரூ. 7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களும், ஒரு சொகுசு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களும் பாண்டியன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தையே உலுக்கிய லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் இந்த அதிரடி ரெய்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் கண்காணிப்புப் பொறியாளர் பாண்டியன் லஞ்சஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கிய விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் தரப்பில் கூறிய தகவல்கள் வருமாறு புதுக்கோட்டை திருமயத்தை சேர்ந்தவர் பாண்டியன். சுற்றுச்சூழல்துறையில் 20 ஆண்டுகளாக பாண்டியன் பணிபுரிந்து வருகிறார். அந்த துறையில் அனுமதி சான்றிதழ் வழங்குவதில் அனைத்து விதமான நுணுக்கங்களும் அறிந்தவர் என கூறப்படுகிறது.
இதனாலேயே ஓய்வு பெற்ற பிறகும் ஒரு வருடம் கூடுதல் பணிக்காலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் அதிக அனுபவம் உள்ளதால், சில உயர் அதிகாரிகளுக்கு தேவையானவற்றை கவனித்து நிறுவனங்களுக்கு அனுமதி சான்றிதழை சுலபமாக வாங்கி கொடுத்து அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழக கடலோரப் பகுதிகளில், வனப்பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதில் லட்சக்கணக்கில் பாண்டியன் லஞ்சம் பெற்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அனுமதி வாங்கிக் கொடுப்பதில் இந்திய வனத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை சந்தேகிக்கிறது.
அவ்வாறு உடந்தையாக இருக்கும் ஐஎப்எஸ் அதிகாரிகள் 6 சினிமா துணை நடிகைகளுடன் அந்தமானில் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பாண்டியன் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரது பினாமியாக செயல்படுவதாகவும் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பாண்டியன் குறித்து பலமுறை லஞ்சப் புகார் வந்தாலும் அவருக்கு ஆதரவாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயரதிகாரி செயல்படுவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுசூழல்துறையில் பொறிவைத்தோ, ரசாயன நோட்டு மூலமாக பாண்டியனை பிடிக்கவில்லை.
பெரும்பாலான தொழிலதிபர்கள், கட்டுமான அதிபர்கள் நேரடியாக அணுகி சான்றிதழ் பெறுவதாலும் அவர்கள் லஞ்சம் பெற்று எளிதில் காரியம் முடித்து கொண்டு பயனடைந்துள்ளனர். இதனால் சுற்றுச்சூழல்துறையில் உள்ள லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை யாருமே காட்டி கொடுக்கவில்லை. கண்காணிப்பாளர் பாண்டியனை பிடிக்க 30 நாட்கள் லஞ்ச ஒழிப்பு துறை தனிப்படை அமைத்து கண்காணித்த பின்னர்தான் அவர் போலீஸ் பிடியில் வசமாக சிக்கியுள்ளாராம். தினமும் ஒரே வழியில் வீட்டுக்கு செல்லாமல் வெவ்வேறு வழியாக வீட்டுக்கு செல்வதும், பலரை சந்திப்பதையும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் மோப்பம் பிடித்துள்ளனர்.
மேலும் பாண்டியனின் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்துள்னர். அலுவலக கார் பார்க்கிங்கை ‘லஞ்ச டீலிங்க்’ பேச பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் சோதனையின் போது பார்க்கிங்கில் உள்ள இருசக்கர வாகனத்தில் பணம் பதுக்கி வைத்திருந்ததை கூட முன்பே கண்காணித்ததால்தான் அதனை பறிமுதல் செய்ய முடிந்ததாம்.
இன்னொரு சுவாரஷ்யமான தகவல் ஒன்றும் இந்த விவகாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழக காவல்துறையில் ஏடிஜிபி பதவியில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரியின் மனைவி, அதே சுற்றுச்சூழல்துறையில் உயரதிகாரியாக இருந்து வருகிறார். அவரை ஊழல் விவகாரத்தில் உடந்தையாக இருக்கும்படி பாண்டியன் தொந்தரவு செய்து வந்ததால்,
இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம். இதன் காரணமாகவும், அந்தமானில் நடிகைகளோடு ஐஎப்எஸ் அதிகாரிகளை அழைத்து சென்ற விவகாரத்தில் ஆத்திரமடைந்த ஒரு ஐஎப்எஸ் அதிகாரியும் சேர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பாண்டியனைப் பற்றி தகவல் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளதாம். தற்போது சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் லஞ்ச விவகாரத்தில் தரகர் போன்று செயல்பட்டுள்ளதால், தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் அதிர்ச்சித்தகவல்களை தெரிவித்துள்ளனர்