நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தபோது ஊழல் புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டில், அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக திலீப் ராய் இருந்தார். அவர் தனது பதவி காலத்தில், ஜார்கண்ட் மாநிலத்தில் சி.டி.எல். என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்குவதற்காக லஞ்சம் பெற்று முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் திலீப் ராய் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிருபணம் ஆகி இருப்பதாகவும், எனவே இவ்வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், இந்த முறைகேடு தொடர்பாக திலீப் ராயிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளது, முக்கியத்துவம் பெறுகிறது.