கோவை,
பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய குழு அறைகூவல் விடுத்தது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் வாலிபர் சங்கத்தினர் பரவலாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருகூர், கணபதி, சிவானந்தபுரம், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், லாப நோக்கை கைவிட்டு உயிருக்கு முன்னுரிமை கொடு. அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வேண்டும். வசதி படைத்தவன் வாழ்வான் என்ற விதி ஒழியட்டும் என முழக்கமிட்டனர்.