பிரதமர், முதலமைச்சர், கவர்னர் அலுவலக முத்திரைகளை பயன்படுத்தி எம்பி, எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக கைதான தந்தை, மகனிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் அவர்கள் மோசடியில் ஈடுபட்டு 6 பங்களாக்கள் உள்பட கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கிக்குவித்தது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல அரசு பல்கலைக்கழகத்தில் பிசிக்கல் டைரக்டராக இருந்து வருபவர் செந்தில்குமார். கவர்னர் மாளிகைக்கு நேரில் சென்ற அவர் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் முன்வைத்தார்.
கவர்னர் மாளிகையில் உள்ள மகாதேவய்யா என்பவர், கவர்னர் தனக்கு நெருக்கம் என்பதால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பு வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக நான் அவரிடம் ரூ. 1.5 கோடி ரூபாய் பணம் கொடுத்தேன்.
மேலும் கவர்னர் அலுவலகத்தில் இருந்து எனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணி நியமனம் செய்திருப்பதாக மெயில் வந்துள்ளது எனவும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அதிகாரிகள் மெயிலை சோதனை செய்து பார்த்தபோது அது போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
மேலும் அதில் அனுப்பப்பட்ட தகவலானது அச்சு அசலாக கவர்னர் மாளிகை அலுவலக முத்திரை மற்றும் அதிகாரிகளின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கவர்னர் மாளிகை அலுவலக அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்துக்கு அது தொடர்பாக புகார் அளித்தனர். கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி டிஜிபி தரப்பில் சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பெங்களூரைச் சேர்ந்த மகாதேவய்யா(54) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் கொரோனா காலத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவர் ரூ. 1.50 கோடி பணம் வாங்கிக் கொண்டு தனக்கு எம்பி சீட் வாங்கித் தருவதாக கூறி தன்னை ஒரு கும்பல் ஏமாற்றியதாக சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சிறையில் இருந்து வெளியே வந்த மகாதேவய்யாதான் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவரையும் ஏமாற்றி உள்ளது என்பதை கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் மைசூரில் பதுங்கியிருந்த மகாதேவய்யா (54), அவரது மகன் அங்கித் (29) மற்றும் இவர்களது நண்பரான ஒசூரைச் சேர்ந்த ஓம்(34) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்திய பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல மாநில கவர்னர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் என்பது போல் காட்டிக்கொண்டு எம்பி, எம்.எல்.ஏ., சீட் வாங்கி தருவதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, சாலை ஒப்பந்தம் போன்ற பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை நேரடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரியவந்தது.
ஒவ்வொரு நபர்களிடமிருந்து ரூபாய் 1.5 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை மோசடி செய்திருப்பதும் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கும் மேல் இவர்கள் மோசடி செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதே பாணியில் இவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் பணக்காரர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மகாதேவய்யாவின் மகனும் எம்இ பட்டதாரி அங்கித் என்பவர் பிரதமர் அலுவலகம், பல மாநில முதலமைச்சர் அலுவலகம், பல மாநிலங்கள் கவர்னர் அலுவலக முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி, போலி அரசு நியமன ஆணைகளை உருவாக்கி மெயில் மூலம் அனுப்பி வந்ததும் தெரியவந்தது.
ஓசூரைச் சேர்ந்த ஓம் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மகாதேவய்யா பெங்களூரில் பெரும் பணக்காரர் என்பதால் இவர் மீது பெங்களூர் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை இதனால் பெங்களூரிலிருந்து மோசடிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கி போலி சான்றிதழ்களை உருவாக்கியதும் தெரியவந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெங்களூர், மைசூர் போன்ற பகுதிகளில் மகாதேவய்யா மூன்று வீடுகளை வாங்கியுள்ளார். அதேபோல அவரது மகன் அங்கித் மூன்று வீடுகள் மற்றும் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளார் என்பதாலும் அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு ரூ. 250 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புகள் உள்ளதாலும் மோசடி செய்த பணத்தில் இவர்கள் சொத்துகள் வீடுகள் வாங்கி இருக்கலாம் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர்.
செந்தில்குமார், சினிமா தயாரிப்பாளர் ஜெபாஜோன்ஸ் ஆகிய இருவர் தவிர தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. ஏமாந்தவர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் வேறு என்னென்ன மோசடிகளில் ஈடுபட்டு உள்ளனர்? இந்தியா முழுவதும் எத்தனை நபர்களை இவர்கள் ஏமாற்றி அதன் மூலம் எவ்வளவு கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.